Sunday, September 19, 2010

கவிதைகள்

"அ" போடும் போதெல்லாம்
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் வகுப்பு டீச்சரைப்(Teacher)
பார்க்க வேண்டுமென
       **************
காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று
       **************


பசியோடிருக்கிறேன்
என்னைத் தின்று
தன் குடலில் செரிக்கிறது
கவிதை
       **************


பக்கங்களை நிரப்பும்
அவசியத்தில்
வசியப்பட மறுக்கிறது
கவிதை
       **************


மௌனங்களில்
கிறுக்கி வைத்துப்போகிறது
சப்தம்
       **************

Sunday, September 12, 2010

செப்டம்பர் 11

பாரதி நீ இறந்துவிட்டாய்
ஆயினும் இரவல் கொடுத்தாய் 
உனது அடிமையாயிருந்த 
கவிதைக் கலையை 
மரபு உன்முன் மண்டியிட்டுநிற்க 
நீ மாற்றுவழியில்
வேறொரு நாடடைந்தாய்
புதுக்கவிதைக்குத்
தலைமகனென்னும் பேரடைந்தாய்
இருந்தாலும் உனக்கு
இவ்வளவு உரமாகாது
உரமில்லா பாரதிக்கு
எழுதுகோல் சாரதியாகாது
உன்னை முழுவதுமாய்ப்
படிக்கவில்லை எவரும்
மூன்றுபா கூட மனனம்
செய்யவில்லை நானும்
காலன் உன்னைக் கைதியாக்க
கரியாகி வந்தான்
"மதமே"றி உன்னைக்
கொண்டு போனான்
சரிவிடு
உன்னை இளைஞனாக்கிப்போனான்
உன்னைத் தனக்குள்கொண்டு
கொஞ்சம் இறையாகிப்போனான்

Sunday, September 5, 2010

அப்பாவுக்கு மட்டும்
S/O
எழுதாமலேயே
கிடைத்து விடுகின்றன
அனுப்பப்படுகின்ற கடிதங்களெல்லாம்
எனக்கு மட்டும்
D/O
எழுதாததால் வந்துசேர்வதேயில்லை
எந்தக் கடிதமும்

நங்கையிற் சிறந்தவள்

பூக்களின் தேவதையே!
பூவின் முதல்இதழே
பட்டாம்பூச்சிக்கு றெக்கை
கடன்கொடுத்தவளே
நின்அழகே உச்சமென்றால்
உன்தாயின் கருவறை என்னென்பேன்
தீயில் விழுந்தெழுந்து
தென்றல் காற்றில் தேய்த்துக்கொண்டு 
நதியில் குளித்தவளோ 
நீ நங்கையிற் சிறந்தவளோ 
உலகம் முழுவதிலும் உள்ள 
உயிர்கள் நோக்குகின்றேன் 
உன்னைத்தானே நான் 
அழகின்தலைவி என்கின்றேன் 
புடவை அணியாதே 
என்புலமை தோற்றுவிடும் 
பாடத் தெரியாமல் 
என்பேனா தலைகுனியும் 
நின்அழகில் தோய்ந்ததனால் 
கண்கள் ஓய்ந்ததனால் 
கதிரவன் ஓய்வெடுக்கப் போகின்றான் 
நீயும் விழிகள் துயிலாயோ 
மூடிய இமைகளுக்குள் 
இருண்ட நட்சத்திரம் 
புதிதாய்க் கிடைக்கட்டுமே...