Sunday, April 29, 2012

வாசிப்பது எவ்வளவு இன்பத்தைத் தருகிறது. பள்ளிப்பருவத்திலிருந்த படிக்கும் பழக்கம் மீண்டும் தொடங்கியிருக்கிறது சில நாட்களாய். வாரப் பத்திரிகைகள்,ஆங்கிலப் புத்தகங்கள்,தினப் பத்திரிகைகள் என எதனையும் விடுவதில்லை. எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போதெல்லாம் வாசிப்பு இருக்கிறது. ஊருக்குப் போகும்போது சனிக்கிழமை வாங்குகின்ற "ஆனந்த விகடனை" இப்போதெல்லாம் வியாழக்கிழமையே வாங்கி இரவுப் பணி முடித்து மதியம் பனிரெண்டு மணிக்கு எழுந்து வெள்ளிகிழமையே வாசித்து முடிக்கிறேன் மீண்டும் அலுவலகம் கிளம்புவதற்கு முன்பே.பள்ளிபருவத்தில் வாசிப்பதுவும், தொலைககாட்சி பார்ப்பதுவுமே பெரும் பொழுதுபோக்கு. கல்லூரி நாட்களிலும் அதன் பிறகு சில வருடங்களிலும் எங்கேயோ தொலைந்து போயிருந்த இந்தப் பழக்கம் திரும்பவும் எப்படி? ...அறை முழுவதும் புத்தகங்கள் இரைந்து கிடைக்கின்றன இப்போது. வாசிப்பு ஒரு தனி சுகம். என்ன தான் "கூகுள்" "பேஸ்புக்"இருந்தாலும் புத்தகங்களைப் போல எந்த ஒன்றும்என் நேசிப்புக்குள்ளானது கிடையாது . சொல்லத் தெரியாத இன்பம் இதயத்தில் இந்த வாசிப்பினால். எப்போது அலைபேசியில் அழைத்தாலும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றே சொல்வதனால் இந்தப் புத்தகங்களையெல்லாம் தீ வைத்துக் கொளுத்தப் போகிறேன் பார் என்று விளையாட்டாக மிரட்டும் தோழிக்கு மட்டும் என்ன சொல்வதென்று தெரியவில்லை நாளை மறுநாள் பார்க்கும்போது.