Sunday, November 7, 2010

என் அவளுக்கு மட்டும் (தொடர்ச்சி)

புதிதாக  விடியும் என்றுதான்
நினைத்தேன் பொழுது 
ஆனால் வழக்கம் போலவே 
விடிந்திருக்கிறது 
அவளுடைய நினைவுகளோடு 
________________________________

தோழியின்  உரிமைகள் 
கனவுகள்,ஏக்கங்கள் 
அதட்டல்கள் வரிசையில் 
அவளைப் பார்க்கப் போகிற நாளும் 
தனிசுகமாய் இனிக்கிறது 
____________________________________

நீ எப்போது பூப்பூத்தாயோ 
அப்போது நான் கவிஞனாகியிருக்கிறேன்
தொலைவில் இருந்தும் 
நாம் தொட்டுக் கொண்டிருந்திருக்கிறோம் 
______________________________________________

உன் திருமணத்திற்கு 
என்னை அழைக்காதே 
ஒருவேளை இதயம் இருப்பதை 
நான் உணரக்கூடும் 
_________________________________________

அளவு கடந்த 
நேசிப்பிற்குள்ளாகி விட்டது 
நம் காதலை 
மீண்டும் புதுப்பித்த 
உன் வீட்டு மொட்டைமாடி 
______________________________________

ஏற்றவளில்லை
மிதமிஞ்சிய அறிவோடும் 
அளவுமீறிய அழகோடும் 
என்னை நேசிக்கிறாள் 
__________________________________

எனக்கு வேண்டும் 
என்தோளில் நீ சாய்ந்துகொண்டு 
பேருந்துப் பயணங்கள் 
காற்றை உண்டு களிக்கும்
அந்திப் பொழுதுகள் 
மெலிதான மௌனம் 
எனக்கான அன்பு 
உயிர்த்தோழி 
நீ....
___________________________________

இப்போதெல்லாம் 
பூக்களைவிட 
மேகத்தைவிட 
உன்னைத்தான் அதிகமாய் நேசிக்கிறேன் 
நீ சண்டையிடத்தான் வேண்டியிருக்கிறது 
பூக்களோடும்,மேகத்தோடும் 
___________________________________________

கண்களைக் கண்டு காதலைச் 
சொல்லிவிட வேண்டுமென்றுதான் 
தோழி 
ஒவ்வொருநாளும் அருகில் வருகிறேன் 
நீ சுவாசிக்கும் ஓசையை 
ரசித்தபடியே என்னை மறக்கிறேன் 
_________________________________________

சிலநாட்களாய் ஒவ்வொரு நொடியும் 
உன்னைப் பற்றியே நினைக்கிறேன் 
உன்னைப் பார்க்காத தருணங்களில் 
என் உயிர் அழுகின்ற சத்தத்தை 
என்னால் உணர முடிகிறது 
சில்லுகளாய் உடைந்து கிடக்கிற 
என் மனதை 
நீ சேர்த்துவிடுவாய் என்ற நம்பிக்கையிருகிறது 

   

Sunday, October 10, 2010

என் அவளுக்கு மட்டும்(பகுதி ஒன்று)

இது என்ன விபரீதம்
உணவுக்குழல் வழி இறங்கி
இதயத்தில் தங்குகிறாய்!
______________________________                    
அசைவக்காரி
என்உயிரைத் தின்று தின்று
உடம்பு வளர்க்கிறாய்!
உயிர்முழுதும் தீர்ந்த பின்னால்
என்உடம்பைத்  தின்று
உயிர் வளர்ப்பாயோ!
_____________________________
யாருக்கும் செலவிடாது
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என் முத்தங்களை 
எனக்கானவளுக்காக  
______________________________
கவிதை என் உணவு
நீ சமைக்கக் கற்றுக்கொள்
______________________________
துண்டிக்க மாட்டாயென்று
நன்கு தெரிந்து கொண்டுதான் 
சொல்கிறேன் 
துண்டித்து விடென்று 
தொலைபேசியில் பேசும்பொழுதெல்லாம் 
______________________________
உயிர்த்தோழி
சோகங்களுக்கு எழுதலாம்
கவிதை
மரணத்திற்கு எப்படி?
ஒருநாள் கூட
நீ சொன்னதில்லை
நேற்றைய முன்தினம்வரை
விடை பெறும்போது
'போகிறேன்' என்று
______________________________
ஒன்று ஞாபகமிருக்கிறதா 
"நாளை திருமணம் என்றால்கூட 
இன்று உன்னுடன் வந்துவிடுவேன்
கவலைப்படாதே" என்றாய்
______________________________
உன் கண்ணீரில்
கண்டு கொண்டேன்
எனக்கான காதல்
அதனால்தான் என்னால்
அழ முடியவில்லை
______________________________

Sunday, September 19, 2010

கவிதைகள்

"அ" போடும் போதெல்லாம்
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் வகுப்பு டீச்சரைப்(Teacher)
பார்க்க வேண்டுமென
       **************
காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று
       **************


பசியோடிருக்கிறேன்
என்னைத் தின்று
தன் குடலில் செரிக்கிறது
கவிதை
       **************


பக்கங்களை நிரப்பும்
அவசியத்தில்
வசியப்பட மறுக்கிறது
கவிதை
       **************


மௌனங்களில்
கிறுக்கி வைத்துப்போகிறது
சப்தம்
       **************

Sunday, September 12, 2010

செப்டம்பர் 11

பாரதி நீ இறந்துவிட்டாய்
ஆயினும் இரவல் கொடுத்தாய் 
உனது அடிமையாயிருந்த 
கவிதைக் கலையை 
மரபு உன்முன் மண்டியிட்டுநிற்க 
நீ மாற்றுவழியில்
வேறொரு நாடடைந்தாய்
புதுக்கவிதைக்குத்
தலைமகனென்னும் பேரடைந்தாய்
இருந்தாலும் உனக்கு
இவ்வளவு உரமாகாது
உரமில்லா பாரதிக்கு
எழுதுகோல் சாரதியாகாது
உன்னை முழுவதுமாய்ப்
படிக்கவில்லை எவரும்
மூன்றுபா கூட மனனம்
செய்யவில்லை நானும்
காலன் உன்னைக் கைதியாக்க
கரியாகி வந்தான்
"மதமே"றி உன்னைக்
கொண்டு போனான்
சரிவிடு
உன்னை இளைஞனாக்கிப்போனான்
உன்னைத் தனக்குள்கொண்டு
கொஞ்சம் இறையாகிப்போனான்

Sunday, September 5, 2010

அப்பாவுக்கு மட்டும்
S/O
எழுதாமலேயே
கிடைத்து விடுகின்றன
அனுப்பப்படுகின்ற கடிதங்களெல்லாம்
எனக்கு மட்டும்
D/O
எழுதாததால் வந்துசேர்வதேயில்லை
எந்தக் கடிதமும்

நங்கையிற் சிறந்தவள்

பூக்களின் தேவதையே!
பூவின் முதல்இதழே
பட்டாம்பூச்சிக்கு றெக்கை
கடன்கொடுத்தவளே
நின்அழகே உச்சமென்றால்
உன்தாயின் கருவறை என்னென்பேன்
தீயில் விழுந்தெழுந்து
தென்றல் காற்றில் தேய்த்துக்கொண்டு 
நதியில் குளித்தவளோ 
நீ நங்கையிற் சிறந்தவளோ 
உலகம் முழுவதிலும் உள்ள 
உயிர்கள் நோக்குகின்றேன் 
உன்னைத்தானே நான் 
அழகின்தலைவி என்கின்றேன் 
புடவை அணியாதே 
என்புலமை தோற்றுவிடும் 
பாடத் தெரியாமல் 
என்பேனா தலைகுனியும் 
நின்அழகில் தோய்ந்ததனால் 
கண்கள் ஓய்ந்ததனால் 
கதிரவன் ஓய்வெடுக்கப் போகின்றான் 
நீயும் விழிகள் துயிலாயோ 
மூடிய இமைகளுக்குள் 
இருண்ட நட்சத்திரம் 
புதிதாய்க் கிடைக்கட்டுமே... 

Sunday, August 29, 2010

மழை

ஒருவேளை
மழையின் துளிகளுக்குள் 
நெருப்புக்கரு ஒளிந்திருக்குமோ?
புகையோடு விழுகிறதே


வாழ்க்கையின் மிகமெல்லிய 
தடங்களில் நடந்து பார்க்கிறேன்
மழை நோக்கும்போது


முகஸ்துதி செய்வதில்லை
ஒருபோதும் மழை


சில நிமிடங்களில் 
இதயத்தினூடே 
இனிக்கும் உணர்ச்சிகள்
முகில் பூப்பூக்கையில் 


நகைக்கத் தோன்றுகிறது 
மழைத் தூரலுக்குக் குடைதேடும் 
மனிதர்கள் காணும்போது